செய்தி: கட்டுகளை அறுக்கும் கர்த்தர்


செய்தி: Bro. David

அந்நாளில் நான் உன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை. எரேமியா 30 : 8

தேவன் நம்முடைய ஜனங்களாய் நம்மை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிதான ஆசீர்வாதமாக உள்ளது. முதலாவது தேவன் தம் ஜனங்கள் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார். நம்மை தேவன் தம்முடைய ஜனங்களாய் மாற்ற முதலாவது அவர் நம் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு கானான் தேசத்தை கொடுக்கிறார். வல்லமையுள்ள தேவன் இறங்கி வந்து ஓரேப் பர்வதத்தில் மோசேயை சந்தித்தபோது மோசேயிடம் முதலாவது நான் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொள்வேன் என்று வாக்குரைத்தார். அதன்படி பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்ட அந்த இரவில் மாபெரும் இரட்சிப்பை கட்டளையிட்டார். புதிய ஏற்பாட்டில் தேவன் நம்மை பாவங்கள், சாபங்கள் ஆகிய கட்டுகளிலிருந்து விடுவிக்க தம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை பழுதற்ற ஆட்டுக்குட்டியாக நமக்காக தந்தார்.

அதன் மூலமாக நாமெல்லாரையும் தம்முடைய சொந்த ஜனமாக ஏற்றுக்கொண்டார். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவா 1 : 12) நாம் முதலாவது நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போதுதான் நாம் அவர் ஜனங்களாக மாறுகிறோம். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறப்பதால், ஒழுங்காக ஆலயத்திற்கு போவதினால் மடடும் அல்ல இயேசுவை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அவர் நம்மீது உள்ள பாவத்தின் கட்டுகளை சாபத்தின் கட்டுகளை அறுத்து இனி நம்மை ஒருவரும் அடிமை என்று கூறாதபடி நம்மை தம் சொந்த ஜனமாக ஏற்றுக்கொள்கிறார். ஆம் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டுகள் அறுக்கப்பட்டு அவர் ஜனங்களாய் இருப்பது எத்தனை மகிழ்ச்சி.

ஜெபம்: நான் உன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று வாக்கு உரைத்த சர்வ வல்ல தேவனாம் பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியானவரே, இந்த நாளிலும் கூட எனது நிழலின் மறைவிலே என்னை பின் தொடர்ந்து வருகின்ற பாவ நுகத்திலிருந்து என்னை விடுவித்தருளும். நீர் என்னை உம்முடைய மகனாய் மகளாய் தெரிந்து கொண்டமைக்காக நன்றி. நீர் விரும்பும் மகனாக மகளாக வாழ என்னை அர்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக

ஆத்துமாவை நிரப்பிடும் கர்த்தர் - செய்தி: Bro. David


செய்தி: Bro. David

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். எரேமியா 31 : 25

தேவன் தம்முடைய ஜனங்களுக்கு அருளும் மாபெரும் ஆசீர்வாதம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். தம் ஜனங்களை பாவ சாபங்களிலிருந்து மீட்டு, நோய்களை குணமாக்கி, காயங்களை ஆற்றுவது மட்டுமல்லாமல் ஆவிக்குரிய நன்மைகளால் நிரப்புகிறார். அவர் அப்படியே விட்டுவிடாமல் “அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்கு பயப்படும்படிக்கும் நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும், ஒரே வழியையும் கட்டளையிட்டு” தேவன் தம் ஜனங்களுக்கு புதிய இருதயத்தை தந்து வேதத்தை தந்து அனுதினமும் ஆத்துமாவை போஷிக்கிறார். மட்டுமன்றி தம்முடைய பரிசுத்த ஆவியால் நம்மையும், நம் பிள்ளைகளையும் நிரப்புகிறார்.

நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். யோவேல் 2 : 28 கடைசி நாட்களில் தேவஜனங்களுக்காக தேவன் வைத்திருக்கும் உன்னதமான ஆசீர்வாதங்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் தேவனோடு உறவாடும் உன்னதமான அனுபவங்களை நாம் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஏனெனில் நாம் அவருடைய ஜனங்களாயிருக்கிறோம். அவர் நம்முடைய தேவனாக இருக்கிறார். இந்த நாட்களில் நாமும் வாஞ்சையுடன் ஆவிக்குரிய அனுபவங்களுக்காக ஜெபிப்போம். தேவன் நமக்கு கொடுக்கும் உன்னதமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம். சபைகளில் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி ஊற்றப்படுவதாக. பரிசுத்த ஆவியானவரின் உன்னத பெலனுடன் சாட்சிகளாய் ஜீவிக்க ஆத்தும ஆதாயம் செய்து அவர் வருகைக்கு ஆயத்தமாவோம்.

ஜெபம்: நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் என்று வாக்குறைத்த படியே என்னை அனுதினமும் உம்முடைய கிருபையால் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்து போன என் ஆத்துமாவை தேற்றி வழி நடத்தி வருகின்ற தயவுக்காக நன்றி இயேசுவே. எனது வாழ்வின் மறைவான பாவங்களுக்கு என்னை விலக்கி, உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் நிறைவைக் காணச்செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக

நன்மைகளை நமக்களிக்கும் தேவன்


என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள். எரே 31 : 14

தேவன் தம்முடைய ஜனங்களை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால் மட்டுமல்லாமல் இவ்வுலகத்தின் சகல ஆசீர்வாதங்களினாலும் நிரப்புகிறார். கர்த்தர் சொல்கிறார், அவர்களைக் குறித்து சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் (எரே 32 : 42) நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையாயும் இருக்கும். நான் அவர்களுக்கு அருளிசெய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லா சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள். (எரே 33 : 9)

நிச்சயமாகவே தேவன் தம்முடைய நாமம் தரிக்கப்பட்ட ஜனங்களுக்கு அருளிச்செய்யும் நன்மைகளைக் கண்ட தேவ ஜனங்கள் மட்டுமல்ல புறஜாதிகளும் கண்டு தேவனை மகிமைப்படுத்துவார்கள். எனக்கன்பானவர்களே “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்”. (எரே 30 : 22) என்ற வாக்குத்தத்தத்தை பிடித்து குடும்பமாக ஜெபியுங்கள். நமக்கு தேவையான பொருளாதார மற்றும் ஆவிக்குரிய நன்மைகள், நமக்கு தேவையான வீடு, வாகனங்கள், பிள்ளைகளின் படிப்பு, மேற்படி, திருமண காரியங்கள், குழந்தை பாக்கியம், ஊழியப்பாதையில் ஆத்துமாக்கள், ஊழியத்தில் வளர்ச்சி, மட்டுமல்லாமல் நாம் கையிட்டு செய்யும் தொழில், நமக்கு தேவன் தந்த வேலைகளில் உயர்வை கட்டளையிட்டு நம்மை சகல நன்மைகளினால் நிரப்புவார்.

தேசத்தில் தேவஜனங்கள் உயர்த்தப்பட்டு ஆசீர்வாதமாக அமைவார்கள். இதை வாசிக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளே, தேவன் இப்படிப்பட்ட நன்மைகளால் தம் ஜனங்களை நிரப்ப ஆயத்தமாக இருக்கிறார். நாம் அவரை தேவனாக ஏற்று அவர் ஜனங்களாய் வாழ, ஒப்புக்கொடுப்போம்.

ஜெபம்: என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று சொல்லிய படியே என்னை திருப்தியாக்கி நடத்திவரும் அன்பு தகப்பனாம் இயேசுவே.. நான் கையிட்டு செய்யும் காரியங்களை ஆசீர்வதியும். நான் எதிர்பார்த்திருக்கும் நல்ல காரியங்களை எனக்கு தந்தருளும். எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்ற வசனத்தின் படியாக எனது வாழ்வினை ஆசீர்வத்திதருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.