தேவனுடைய விருப்பம் செய்வதே நமக்கு இளைப்பாறுதல் !

தேவனுடைய விருப்பம் செய்வதே நமக்கு இளைப்பாறுதல் !

தேவன் விரும்புவதெதுவோ அதுவே உங்கள் விருப்பமாயும் இருக்குமென்றால், எந்நிலையிலும் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது. நீங்கள் வைத்துக்கொள்ளும்படி தேவன் விரும்பாத எதையும் நீங்கள் வாங்குவதற்கோ, உரிமை கொள்வதற்கோ ஆர்வம் கொள்ளவில்லையென்றால், நீங்கள் எப்போதும் இளைப்பறுதலில் இருக்கலாம்! ஏனெனில், உங்களுக்குத் தேவையாயிருந்தால் அதை அற்புதமாய் தேவன் வழங்கிடுவாரே! ஆனால் உலகப்பொருளின் மீது கொண்ட இச்சையை திருப்தி செய்வதற்காக ‘இதையும் அதையும்’ வாங்குவதற்கு விரும்புவீர்களென்றால், நீங்கள் எப்போதும் பிரச்சனைக்குள்தான் ஓடி நிற்பீர்கள்!!

இதே விசுவாசத்தின் அடிப்படைதான் நமக்குரிய வாழ்க்கைத் துணையைக் கண்டுகொள்ளும் விஷயத்திலும் பொருந்தும். "வீடும் ஆஸ்தியும் மாத்திரமே ஓர் தகப்பன் தன் மகனுக்கு தரமுடியும். ஆனால் புத்தியுள்ள மனைவியையோ கர்த்தர் மாத்திரமே அருள முடியும்" (நீதி .11:14-Living Bible) என்றே வாசிக்கிறோம்.

உங்கள் வாழ்க்கை துணையாய் இருக்கும்படி தேவன் யாரையேனும் முன்குறித்திருக்கும்போது "அந்த நபரை" வேறு யாரும் அபகரித்துச் சென்றுவிடுவார்கள் என்ற அபாயம் ஏற்படுமோ? நிச்சயம் இல்லை! நீங்கள் சர்வவல்ல தேவனின் ஆளுகையை விசுவாசிக்கும் வரை அந்த அபாயம் நிச்சயம் இல்லை!!

நீங்கள் பொருமையிழந்து "பாய்ந்து சென்று" பற்றிக்கொள்ளும் அவசியமும் இல்லை. தேவன் அந்த நபரை உங்களுக்காகவே வைத்து வைப்பதற்கு வல்லவர்! நீங்கள் இளைப்பாறுதலிலேயே இருக்கலாம்!! ஆம், தேவன் ஆதாமை நித்திரைக்குள்ளாக்கினார்! இவ்வாறு ஆதாம் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போதுதான் (துணையைத் தேடி அவன் தோட்டத்தைச் சுற்றி அவசர அவசரமாய் பதறி ஓடிக்கொண்டிருக்க வில்லை), தேவன் அவனுக்கென்று ஓர் மனைவியை ஆயத்தப்படுத்தினார். அதற்குப் பிறகு, அவர் அவனை எழுப்பி ஏவாளை அவனுக்கு கொடுத்தார். ஆதாமை தேவன் எவ்வளவு நேசித்தாரோ அதே அளவு உங்களையும் நேசிக்கிறபடியால் அவர் உங்களுக்கும் அப்படியே செய்வார்!

தேவனுடைய சித்தத்தின் எல்லைக்கு வெளியே உங்களுக்கு எவ்வித நோக்கமும் இல்லாமல், தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டு ‘நீங்கள் தனித்திருக்கவும்’ ஆயத்தமென்றால், இப்போது நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டிய அவசியமேயில்லை. தங்களுக்குரிய எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புவித்தவர்களுக்காக கிரியை செய்யும்படி தேவனுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது (2நாளாகமம் 16:9). ஓ, நமக்குத்தான் எவ்வளவு அருமையான தேவன் இருக்கிறார்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்