உங்களுக்கு தவறிழைத்தவர்களை மன்னியுங்கள்!

உங்களுக்கு தவறிழைத்தவர்களை மன்னியுங்கள்!

செய்தி: சகரியா பூணன்

"மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத்தேயு 6:15) என இயேசு கூறினார். இதை இயேசு மேலும் வலியுறுத்திக் கூறும்பொழுது நாம் பிறரை மேலோட்டமாக அல்ல "மனப்பூர்வமாய்" மன்னிக்க வேண்டும் என்றும் கூறினார் (மத்தேயு 18:35). நாம் பிறரை ‘முழுவதுமாய்’ ‘மனபூர்வமாய்’ மன்னிக்கா விட்டால், நாம் தேவனால் மன்னிக்கப்படுவதும் ஒருக்காலும் கைகூடாது! பிறர் செய்த செயலை நாம் ஒருவேளை மறக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் எப்பொழுதெல்லாம் பிறர் செய்த தீமையை நினைவுகூரும்படி நாம் சோதிக்கப்படுகிறோமோ, அப்பொழுதெல்லாம் அத்தீமைகளை நினைப்பதற்கு மறுத்துவிடநம்மால் நிச்சயம் முடியும்!

சில சமயங்களில் உங்களுக்குச் சொல்லொண்ணா தீமை விளைவித்த ஒருவரை மனப்பூர்வமாய் மன்னிக்க முடியாதபடி நீங்கள் கஷ்டப்படலாம். அச்சமயங்களில், அவரை மன்னிப்பதற்கு உதவும்படி தேவனிடம் முறையிட்டு ஜெபியுங்கள். அப்போது எந்த மனிதரையும் மன்னிப்பதற்குரிய விருப்பத்தையும் அதை நிறைவேற்றுவதற்குரிய பெலனையும் தேவன் உங்களுக்குத் தருவதை நீங்களே கண்டு ருசிப்பீர்கள்!

நம்முடைய கோடிக்கணக்கான பாவங்களை தேவன் இலவசமாய் மன்னித்திருப்பதை நீங்கள் சற்றே தியானித்தால், அதே போல பிறரை மன்னிப்பது உங்களுக்கு இப்போது கஷ்டமாயிராது. நாம் யாரையேனும் மன்னியாதிருக்கும் போதுதான் சாத்தான் நம்மைத் தன் வல்லமையால் பிடித்துக்கொள்ளுகிறான்! எனவேதான், "சத்தானாலே மோசம் போகாதபடிக்கு பிறரை மன்னியுங்கள்!" என பவுல் புத்தி கூறினார் (2கொரிந்தியர் 2:10,11).

உங்கள் சகோதரனையோ அல்லது சகோதரியையோ மன்னிக்காவிட்டால், தேவன் உங்கள் ஜெபங்களை கேட்கவே மாட்டார். "என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" என வேதம் தெள்ளத் தெளிவாகவே கூறுகிறது (சங்கீதம் 66:18). தேவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டார் என்றுகூட இல்லாமல், எனக்குச் ‘செவிகொடுக்கக்கூட’ மாட்டார் எனக் கூறப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா! இனியும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாதிருப்போமாக!!

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்